”சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் அ.ம.மு.க., அ.தி.மு.க., ஒன்றிணைந்து செயல்படும். அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது தேவையில்லாதது” என, சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மக்களை தொகுதி எம்.பி., கார்த்தி சிதம்பரம், திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா பாதிப்பைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளிடம் உத்திகள் இல்லை. உலகளவில் மருந்து கிடைத்தால் தான் தீர்வு ஏற்படும். விவசாயத்திற்கு இலவ சமின்சாரம் தொடர வேண்டும். ஆனால், பா.ஜ.,க இதை விரும்பவில்லை.
சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் அமமுக - அதிமுக ஒன்றிணைந்து செயல்படும்.
இந்தியாவிற்கு புதிதாகக் கோயில்கள் தேவையில்லை. இந்தியாவிற்கு மருத்துவமனைகள், கல்லூரி, பள்ளிகள் தான் தேவை.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒரு விபத்தில் உருவான அரசு. இந்த ஆட்சிக்கு ஆறு மாதத்தில் தீர்வுகிடைக்கும். திமுக, காங்கிரஸ் கூட்டணி பொதுத்தேர்தலுக்கு தயாராக உள்ளது. தேர்தலில் வெற்றிபெற்று திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் அமர்வார்.
நாடாளுமன்றம் நடைபெறாத நேரத்தில் சுற்றுச்சூழல் சம்பந்தமான அவசரச் சட்டம் கொண்டுவருவது சுற்றுச்சூழலுக்கு எதிரானது மட்டுமல்ல ஜனநாயகத்திற்கும் விரோதமானது, என்றார்.
தொடர்ந்து பழநி சென்ற அவர் மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு செய்தியாளர்களிடம் கூறுகையில், "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தேவையற்றது, இந்தியாவில் புதிய கோயில், மசூதி மற்றும் தேவாலயங்கள் தேவையில்லை.
இருக்கும் பழமை வாய்ந்த கோயில்களையே பராமரிக்க முடியாமல் இருக்கும்போது கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதிய கோயில் கட்டுவதுத் தேவையில்லை. இதை நான் ஒரு ஆன்மீகவாதி என்ற அடிப்படையில் தெரிவிக்கிறேன்.
ரஜினியால் மட்டுமே தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவரமுடியும் என்ற தமிழருவி மணியன் பேசியுள்ளார். தமிழருவி மணியன் மிகவும் ராசியானவர், அவர் யாரை ஆதரித்தாலும் அது விளங்காது" என்றார்.
பேட்டியின் போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரசூல் மொகைதீன், முன்னாள் எம்.எல்.ஏ., தண்டபாணி ஆகியோர் உடன் இருந்தனர்.