கைது செய்யப்பட்ட அருண் கிருஷ்ணன் 
தமிழகம்

பெரியார் சிலையை அவமதித்தவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது 

டி.ஜி.ரகுபதி

கோவையில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் கைதானவர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி ஏஜென்ட் காலனி முன்பு பெரியார் சிலை உள்ளது. இந்த சிலை மீது கடந்த 17-ம் தேதி மர்ம நபர்கள், காவி வண்ணத்தைப் பூசி அவமதித்தனர். இதுதொடர்பாக, கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில் 153, 153 ஏ(1)(பி), 504 இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்தனர். மேலும், பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனமும் தெரிவித்து இருந்தனர்.

அவமதிக்கப்பட்ட பெரியார் சிலை

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணையைத் தொடர்ந்து, செட்டிபாளையம் சாலை போத்தனூரைச் சேர்ந்த, பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளரான அருண் கிருஷ்ணன் (21) காவல்துறையிடம் சரண் அடைந்தார். இவரை குனியமுத்தூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக, விசாரணையில், கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில், இந்து கடவுள் முருகன் குறித்து அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டி, மேற்கண்ட செயலில் ஈடுபட்டதாக அவர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்து இருந்தார்.

இந்நிலையில், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் செயல்பட்ட அருண் கிருஷ்ணனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவிட்டார். அதன்படி, அருண் கிருஷ்ணனை குனியமுத்தூர் காவல்துறையினர் நேற்று (ஜூலை 28) தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கான ஆணையை நேற்று மாலை சிறைத்துறை நிர்வாகத்திடம் வழங்கினர்.

SCROLL FOR NEXT