பணி நேரத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்தபடி திருச்செங்கோட்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் ஊழியர்கள் பணிபுரிந்தனர். 
தமிழகம்

டாஸ்மாக் பணி நேரத்தை குறைக்க பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை

செய்திப்பிரிவு

டாஸ்மாக் பணி நேரத்தை குறைக்க வேண்டும், என நாமக்கல் மாவட்ட எஸ்சி, எஸ்டி டாஸ்மாக் பணியாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.முருகேசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கரோனா காலத்தில் ஆய்வு என்ற பெயரில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறவர்களால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அனைத்து பணியாளர்களுக்கும் நோய் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும். கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்து போன டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்திற்கு மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப் படுவதை போல் ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்.

இரவு 8 மணி வரை உள்ள பணி நேரத்தை மாலை 5 மணி வரை என நேரத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து வரும் 3-ம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என்றார். சங்கப் பொருளாளர் அருள், கமலக் கண்ணன், சேகர், ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுபோல், சேலத்தில் டாஸ்மாக் பணியாளர்களின் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை கழுத்தில் அணிந்து, நேற்று பணியில் ஈடுபட்டனர். சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் கடை முன்பாக சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழியர்கள் கூறும்போது, கரோனா காலத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கூடுதல் சிறப்பு ஊதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், முழு ஊரடங்கின் போது விதிக்கப்பட்ட 50 சதவீதம் அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும், என்றனர்.

SCROLL FOR NEXT