தமிழகம்

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி செப்.28-ல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி, இம்மாதம் 28-ம் தேதி கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கோகுல்ராஜ் படுகொலையை விசாரித்துக் கொண்டிருந்த திருசெங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபி்ரியா கடந்த 18.9.2015 அன்று திடீரென உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என அவரே எழுதிவைத்துள்ளக் கடிதத்தில் கூறப்பட்டு இருந்தாலும், அவருடைய இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தமிழக அரசு விஷ்ணுபிரியா சாவுக் குறித்த வழக்கை மாநிலக் குற்றப்பிரிவு - குற்றப்புலனாய்வு துறை (சிபிசிஐடி) விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது.

பணிசுமைகளாலும், மேலதிகாரிகள் கொடுத்த நெருக்கடிகளாலும் உருவான மன அழுத்தத்தின் விளைவாகவே அவர் தற்கொலை செய்துக்கொண்டார் என்றும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளின் அச்சுறுத்தல்களால் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அக்குற்றவாளிகளுக்கு ஆதரவான அரசியல் கட்சிகள் மற்றும் சாதி அமைப்புகளைச் சார்ந்த சமூக விரோத சக்திகளின் மிரட்டலகளுக்கு அஞ்சி தூக்கிட்டுக் கொண்டார் என்றும், அது தற்கொலையே அல்ல திட்டமிட்டப் படுகொலை என்றும் பல்வேறு சந்தேகங்கள எழுப்படுகின்றன.

எனவே, இவ்வழக்கை தமிழக காவல் துறை விசாரிப்பது சரியில்லை என்பது பொதுக்கருத்தாக உள்ளது. அதனால் தான் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.

எனினும், தமிழக முதல்வர் அவர்கள் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாதென திட்டவட்டமாக சட்டமன்றத்தில் கூறியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. தமிழக முதல்வர் தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. விஷ்ணுபி்ரியாவின் சாவும் கோகுல்ராஜ் கொலை வழக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக அமைந்துள்ளது.

எனவேதான் தமிழக அரசும் இவ்விரு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் முதன்மை குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கையும் மைய புலனாய்வு (சிபிஐ) விசாரணைக்குப் ஆணையிட வேணடுமெனவும், விஷ்ணுபிரியாவின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடுத் தொகை வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.

இக்கோரிக்கைகளை வற்புறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 28.9.15 அன்று கடலூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுமென தெரிவிக்கப்படுகிறது" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT