தமிழகம்

தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தகவல்

செய்திப்பிரிவு

யாருடன் கூட்டணி என்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு நேற்று காலை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் பெரிய பயன் எதுவும் கிடைக்கப்போவதில்லை. சென்னை விமான நிலையத்தில் இருந்து நந்தம்பாக்கம் வரை உள்ள சாலைகளை சுத்தமாக வைத்திருக்கின்றனர். ஆனால் இது இப்படியே இருக்கப் போவதில்லை. 2 நாட்களுக்குத்தான் இருக்கும். அதன்பின் சாலைகள் பழையபடி ஆகிவிடும். இந்த மாநாடும் வெறும் கண்துடைப்புதான். தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் பல பகுதிகளில் மின்வெட்டு நிலவுகிறது. எங்கெல்லாம் மின்வெட்டு இருக்கிறது என்பதை என்னால் பட்டியலிட்டு கூற முடியும்.

தேர்தல் கூட்டணி பற்றி முடிவு செய்ய இப்போது ஒன்றும் அவசரம் இல்லை. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி பார்த்துக் கொள்ளலாம்.

ஜவஹர்லால் நேரு, அண்ணா போன்றவர்கள் கூட்டணி பற்றி முடிவு எடுக்க அதிக நாட்கள் தேவையில்லை என்று சொல்லியிருக்கின்றனர். என்னுடையதும் அதே நிலைபாடுதான். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT