தமிழகம்

‘சீமான், ஹரிநாடாரை கைது செய்ய வேண்டும்’- மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியதாக தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமி புகார்

செய்திப்பிரிவு

மருத்துவமனையில் இருந்து காரணம் இல்லாமல், தான் வெளியேற்றப்பட்டுள்ளதாக, தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி கூறினார். தன்னை மிரட்டிவரும் சீமான், ஹரிநாடாரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஃப்ரெண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், மீசையை முறுக்கு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் வசிக்கும் இவர், கடந்த 26-ம் தேதி அதிக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

முன்னதாக முகநூலில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘‘சீமானும், அவரது கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக
மன அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்றேன். ஹரி நாடார் என்பவரும் என்னை அசிங்கப்படுத்தினார். எனவே, சீமான், ஹரிநாடாரை கைது செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார். சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலாக பரவியது. இந்த நிலையில், மருத்துவமனைக்கு எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வெங்கடேசன் வந்து, அங்கு சிகிச்சை பெற்றுவந்த விஜயலட்சுமியிடம் நேரில் விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டார். பின்னர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயலட்சுமி சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் விஜயலட்சுமி நேற்று கூறியதாவது:

சீமானின் அக்கிரமத்துக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. எனக்கு பின்னால் பாஜக இருக்கிறது, காங்கிரஸ் இருக்கிறது என்று தேவையில்லாமல் வதந்தி பரப்புகின்றனர். இப்போதுகூட எந்த காரணமும் இல்லாமல் மருத்துவமனையில் இருந்து நான் வெளியேற்றப்பட்டுள்ளேன்.

மாஜிஸ்திரேட் வந்து என் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று தெரியவில்லை. என்னை பற்றி அவதூறாகப் பேச வேண்டாம் என்றுதான் சொல்கிறேன். சீமானுக்காக, ஹரிநாடார் என்னை மிரட்டுகிறார். அவர்கள் இருவரையும் கைது செய்யவேண்டும். அவர்களை காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டாம். இதுசம்பந்தமாக சீமான் என்னிடம் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT