விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்காக அரசு ஒதுக்கிய இடத்தில் குடியிருப்பவர்களுக்கு இடையூறாக சிலர் தடுப்பு வேலி அமைத்து வெளியே வரவிடாமல் தடுப்பது குறித்து ஊடகத்தில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், அச்சரம்பட்டு ஊராட்சியில் ஆதியன் பழங்குடி இன மக்களான குடுகுடுப்பைக்காரர்கள் கடந்த 15 ஆண்டுகளாக சாலையோரப் புறம்போக்கு இடத்தில் வசித்து வந்தனர்.
தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்திருந்த அடிப்படையில் அரசு அவர்களுக்குக் கடந்த 2018-ம் ஆண்டு வானூர் தாலுக்கா, திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் தலா 41 சதுர மீட்டர் அளவுள்ள வீட்டுமனைகளை ஒதுக்கியது. அரசு ஒதுக்கப்பட்ட அந்த இடத்தில் அப்பழங்குடியினர் தற்போது வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினர் பழங்குடியின மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத வகையில் பாதையில் கம்பி வேலி அமைத்துள்ளனர். இதனால் அப்பழங்குடியின மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியிலேயே வேலி அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது சம்பந்தமாக தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இச்செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து (suo-moto) வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நான்கு வாரங்களில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என, விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு, மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.