சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்து.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் கொலையான வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. நெல்லை சிபிசிஐடி அனில்குமார் சார்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் அரசு தரப்பில், சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் போல் போலீஸாரால் தாக்கப்பட்டு இறந்ததாக கூறப்படும் மகேந்திரன் வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி கண்காணித்து வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டது.
சிபிஐ தரப்பில், சிபிஐ விசாரணை அதிகாரிகள் 8 பேரில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விசாரணை நிலை அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கொலையான ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில் இந்த வழக்கில் தங்களையும் ஒரு எதிர்மனுதாராக சேர்க்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் விசாரணை ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.