வாணியம்பாடியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்து குணமடைந்து மீண்டும் பணியில் சேர்ந்த தலைமைக் காவலருக்குப் பழக்கூடை கொடுத்து திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் வரவேற்றார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர் பாஸ்கர். இவர் வேலூர் பகுதியைச் சேர்ந்தவர். வேலூரில் இருந்து தினமும் திருப்பத்தூர் மாவட்டத்துக்குப் பணிக்காக வந்து சென்றார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில், கரோனா தடுப்புப் பணியில் தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்தபோது தலைமைக் காவலர் பாஸ்கருக்குக் கரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குணமடைந்த தலைமைக் காவலர் பாஸ்கர், நேற்று (ஜூலை 27) வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் பணிக்குத் திரும்பினார். அவரை, திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பழக்கூடை கொடுத்து வரவேற்றார். அப்போது, வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் செங்குட்டுவன், வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி உட்பட பலர் உடனிருந்தனர்.