தமிழகம்

வேலை உறுதி திட்டத்தில் சட்டக்கூலியை அமல்படுத்த வலியுறுத்தி கோவில்பட்டி, எட்டயபுரத்தில் விவசாயி தொழிலாளர் சங்கம் போராட்டம்

எஸ்.கோமதி விநாயகம்

வேலை உறுதி திட்டத்தில் சட்டக் கூலியை அமல்படுத்த வலியுறுத்தி கோவில்பட்டி, எட்டயபுரத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.

100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். சட்டக் கூலி ரூ.256-ஐ தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும். வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் வேலை உறுதி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் உணவுப் பொருட்களையும் பலசரக்குப் பொருட்களையும் கரோனா முடியும் வரை இலவசமாக வழங்க வேண்டும். 6 மாதமாக பணியிழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு மாதம் தலா ரூ.7,600 வழங்க வேண்டும்.

60 வயது முதியவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி களைத் திறந்து அனைத்து குழந்தைகளுக்கும் உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நுண் நிதி நிறுவன கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் நேற்று காலை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கணேசன், விஜயராஜ், மாரியப்பன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் தினேஷ் குமார், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் ராமசுப்பு, மாவட்ட தலைவர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை முழங்கினர்.

எட்டயபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கு.ரவீந்திரன், மார்க்சிஸ்ட் தாலுகா குழு உறுப்பினர்கள் நடராஜன், பாலமுருகன், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT