உயர்கல்வி சேர்க்கைக்காக மாணவர்கள் சான்றிதழ்கள் பெறுவதற்காக அல்லல்படும் நிலையில், அது தொடர்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா விளக்கமளித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர் கல்விக்காக விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இதற்காக, புதுச்சேரி அரசின் 'சென்டாக்' இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு விண்ணப்பிப்பதற்கு சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றுகள் புதிதாக எடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் எனவும், பிராந்திய இட ஒதுக்கீடு பெறுவதற்குரிய சான்று புதிதாக பெற வேண்டியுள்ளது என்றும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆக.5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிலையில், தற்போது இந்த சான்றுகளை உடனடியாகப் பெறுவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று பள்ளி மாணவ, மாணவிகள் ஏரளமானோர் பெற்றோர்களுடன் ஒரே சமயத்தில் காரைக்கால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடி நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கரோனா அச்சம் நீடித்து வரும் சூழலில் மாணவர்களுக்கு இது சிரமத்தைத் தருவதோடு நோய் பரவலுக்கு இது வழிவகுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்தனர். மேலும், இதற்கான மாற்று வழிமுறைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், இது குறித்து மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா இன்று (ஜூலை 28) செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரியில் உயர் கல்விக்கான சேர்க்கை நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இதற்காக விண்ணப்பிக்க சாதி, இருப்பிட சான்று உள்ளிட்ட சில சான்றிதழ்கள் மாணவர்களுக்கு தேவைப்படுகின்றன. மாணவர்களால் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள பழைய சாதி சான்றிதழும், இருப்பிட சான்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு செல்லத்தக்கது ஆகும். அதனால் மாணவர்கள் புதிதாக சாதி, இருப்பிட சான்றுகளுக்குத் தற்போது விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. மாணவர் சேர்க்கைக்குப் பின்னர் ஒரு மாத காலத்தில் புதிய சான்றிதழ்களை பெற்று சமர்ப்பித்தால் போதும் என ஏற்கெனவே கல்வித்துறை சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கையில் பிராந்திய அடிப்படையிலான இட ஒதுக்கீடு பெறுவதற்குரிய சான்றிதழ்களை அளிப்பதில் காலதாமதம் செய்யப்படுவதாக சில புகார்கள் சொல்லப்பட்டன. இது தொடர்பாக, வட்டாட்சியர்கள், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநர் உள்ளிட்டோருக்குக் காலதாமதமின்றி ஒரே நாளில் சான்றிதழ்களை வழங்க உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்றும் காரைக்கால் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் ஏராளமானோர் சான்றிதழ்கள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தனிமனித இடைவெளியை பின்பற்றி நிற்குமாறு காவல்துறையினர் அவர்களை அறிவுறுத்தினர்.