கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாலன் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவக் கல்லூரியில் இன்று காலை உயிரிழந்தார்.
புதுச்சேரி அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாலனுக்கு (68) கடந்த 23-ம் தேதியன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை அவருக்கு இருந்ததால் நேற்றைய தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று (ஜூலை 28) அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பாலன் நியமன சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஏ.எஃப்.டி பஞ்சாலையின் வாரியத் தலைவராகவும் பதவி வகித்தவர். கரோனா தொற்றுக்கு புதுச்சேரியில் உயிரிழந்த முதல் அரசியல் கட்சி நிர்வாகி இவராவார். எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸில் மிக முக்கிய பொறுப்பு வகித்த அவர் உயிரிழந்துள்ளதால் கட்சித்தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அலுவலகம் வெளியிட்ட தகவலில், "பாலனுக்கு கரோனாவுடன் மூச்சுக்குழாய் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 23-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார். உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் கடுமையான கோவிட் நிமோனியாவுடன் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் ஆகியவையும் இருந்தன" என்று குறிப்பிட்டிருந்தனர்.
சுகாதாரத்துறை அலட்சியம்
இறந்த என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலனின் தந்தை பெயர் மற்றும் முகவரி விவரங்களை சுகாதாரத்துறை தனது வாட்ஸ் அப் குழுவில் வெளியிட்டது. சுகாதாரத்துறை தரப்பில் வெளியிட்ட தகவலில், முகவரி உள்ளிட்ட விவரங்களை தவறாக குறிப்பிட்டிருந்தனர். அதை பார்த்த பலரும் இம்முகவரி புதுச்சேரி துணை சபாநாயகர் பாலனின் முகவரி என்று தெரிவித்தனர். இதையடுத்து, புதுச்சேரி சுகாதாரத்துறை வாட்ஸ் அப் குழுவில் இருந்த தகவல்களை இயக்குநர் மோகன்குமார் நீக்கினார்.