தமிழகம்

சென்னை காவல் துணை ஆணையர்களிடம் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் புகார் தெரிவிக்க வசதி

செய்திப்பிரிவு

ஊரடங்கு அமலில் இருப்பதால், வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் துணை ஆணையர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு (6369 100 100) வழியாக திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் பகல் 12 முதல் 1 மணி வரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்திருந்தார். அதன்படி, கடந்த 10 அமர்வுகளில் 188 புகார்கள் கேட்டறியப்பட்டு அவற்றில் 129 குறைகள் தீர்க்கப்பட்டன.

இந்நிலையில் பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து இந்த வசதி தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட 12 காவல் துணை ஆணையாளர்களிடம் பொதுமக்கள் தங்கள் குறைகளை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வழியாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 முதல் 1 மணி வரை தொடர்பு கொண்டு தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அதன்படி கீழ்க்கண்ட எண்களில் தங்கள் எல்லைக்கு உட்பட்ட காவல் மாவட்டங்களின் துணை ஆணையர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்:

புனித தோமையார் மலை - 70101-10833, அடையாறு - 87544-01111, தியாகராய நகர்- 90030-84100, மயிலாப்பூர்- 63811-00100, திருவல்லிக்கேணி - 94981-81387, கீழ்ப்பாக்கம் - 94980-10605, பூக்கடை - 94980-08577, வண்ணாரப்பேட்டை - 94981-33110, மாதவரம் - 94981-81385, புளியந்தோப்பு- 63694-23245, அண்ணாநகர் - 91764-26100, அம்பத்தூர் - 91764-27100.

மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை சுருக்கமாக வாட்ஸ் அப் வழியாக ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள 63691-00100 என்ற எண்ணிலும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்குறைகளை ஆராய்ந்த பின்னர் தேவைப்படும் புகார்தாரர்களை காவல் ஆணையர் வீடியோ கால் மூலம் நேரடியாகத் தொடர்பு கொள்வார். பிற சாதாரண குறைகள் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துணை ஆணையாளர்களுக்கு மேல்நடவடிக்கை எடுக்க அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT