கரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை பாரிமுனை பத்ரியன் தெருவில் 4 மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்த பூ விற்பனை நேற்றுமுதல் மீண்டும் தொடங்கியது. தெருவின் நுழைவுவாயிலில் பூ வாங்க வரும் அனைவருக்கும் தனிமனித இடைவெளியை பின்பற்ற குடை வழங்கப்பட்டு உடல் வெப்ப அளவு பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அனைத்து கடைகளின் முன்பும் தடுப்பு கம்புகள் அமைத்து, வரிசையில் நிற்க வைத்து விற்பனை நடந்தது. படம்: ம.பிரபு 
தமிழகம்

கடும் கட்டுப்பாடுகளுடன் பாரிமுனை பகுதிகளில் மீண்டும் பூக்கடைகள் திறப்பு

செய்திப்பிரிவு

சென்னை பாரிமுனை பகுதியில் கடந்த 4 மாதங்களாக செயல்படாமல் இருந்த பூக்கடைகள் நேற்று கடும் கட்டுப்பாடுகளுடன் செயல்படத் தொடங்கின.

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில்தான் அதிக அளவில் கரோனா தொற்று ஏற்பட்டது. அதன் காரணமாக அம்மண்டலத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை முழுவதும் அடைக்கப்பட்டன. அதன் காரணமாக கொத்தவால் சாவடி, பாரிமுனை பகுதிகளில் இயங்கி வந்த காய்கறி மற்றும் பூ மொத்த விற்பனை கடைகளும் மூடப்பட்டன. இம்மண்டலத்தில் தற்போது தொற்று வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் பிராட்வே பேருந்து நிலையத்தில் காய்கறி கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பூக்கடைகளை திறக்கவும் அனுமதிக்குமாறு பூ வியாபாரிகள், மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

குடை வழங்கல்

உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்போம் என உறுதி அளித்தால் கடைகளை திறக்க அனுமதிக்கப்படும் என்றுமாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். இதைத் தொடர்ந்து நேற்றுமுதல் பாரிமுனை பகுதிகளில் பூ மொத்த விற்பனை தொடங்கியது.

பூக்களை வாங்கிச் செல்ல வரும்வியாபாரிகளின் கைகளில் முதலில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர்களுக்கு குடைவழங்கப்படுகிறது. அதன் மூலம் அங்கு வியாபாரிகள் போதிய இடைவெளியுடன் நிற்கஏதுவாக அமைகிறது. ஒவ்வொருவியாபாரியும் உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி மூலமாக பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

கடைகளுக்கு ஒரு வழியில் சில்லறை வியாபாரிகள் அனுமதிக்கப்பட்டு, மற்றொறு வழியில்வெளியே செல்ல வகை செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சில்லறை வியாபாரிகளிடமிருந்து குடைகளை வியாபாரிகள் சங்கத்தினர் பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT