காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள சனி பகவானுக்குத் தனிச் சன்னதியுடன் கூடிய புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று (ஜூலை 27) முதல் இணைய வழி நவக்கிரஹ சாந்தி ஹோமம் தொடங்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்டத் துணை ஆட்சியரும், நிர்வாக அதிகாரியுமான(கோயில்கள்) எம்.ஆதர்ஷ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
''திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வரும் சனீஸ்வர பகவானை வேண்டி நடத்தப்பட்டு வந்த நவக்கிரக சாந்தி ஹோமம், கரோனா பேரிடர் காரணமாக அரசு உத்தரவின்படி நிறுத்தப்பட்டது. தற்போது அரசு வழிகாட்டுதலின்படி கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே நவக்கிரக சாந்தி ஹோமத்தில் பங்கேற்கும் வகையில் இணையவழி பூஜை (இ-நவக்கிரஹ சாந்தி ஹோமம்) நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக www.thirunallarutemple.org என்ற தேவஸ்தான வலைப்பக்கத்தில், ஹோமம் பதிவு செய்யும் வசதி அதிகரிக்கப்பட்ட ஹோம காலங்களின் படி ( 3 காலங்களில் 6 நேரங்கள்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் தாங்கள் விரும்பும் கால பூஜைகளைப் பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் பதிவு செய்த ஹோம பூஜைக்கான இணையவழி இணைப்புத் தொடர் (யூடியூப் சேனல் இணைப்பு) அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு பிரத்யேகமாக அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் அவர்கள் இ-நவக்கிரஹ சாந்தி ஹோமத்தில் பங்கு கொண்டு பயன்பெறலாம்.
இந்த இணையவழி ஹோமத்தைத் தொடங்கி வைத்து புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி இன்று காலசாந்தி ஹோம பூஜையில் இணைய வழியில் அவரது வீட்டிலிருந்தே கலந்து கொண்டார். அப்போது கரோனா பாதிப்பிலிருந்து புதுவை மாநில மக்கள், இந்திய மக்கள், உலக மக்கள் அனைவரும் விரைவில் விடுபட்டு, வாழ்வில் எல்லா வளமும் பெற்றிட வேண்டி சங்கல்பம் செய்து சனீஸ்வர பகவான், பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் ஆகிய சுவாமிகளிடம் பிரார்த்தனை செய்தார்''.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.