தமிழகம்

நெல்லை மாவட்டத்தில் புதிதாக 284 பேருக்கு கரோனா: நோய்த் தொற்றால் சார் பதிவாளர் மரணம்

அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 284 பேருக்கு கரோனா பாதிப்பு இன்று கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகரில் கடந்த சில நாட்களாக நோய் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில், தற்போது அம்பாசமுத்திரம் போன்ற பிற வட்டாரங்களிலும் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தில் 86, சேரன்மகாதேவியில் 39, திருநெல்வேலி மாநகரில் 75, களக்காட்டில் 7, மானூரில் 9, நாங்குநேரியில் 8, பாளையங்கோட்டை தாலுகாவில் 29, பாப்பாக்குடியில் 10, ராதாபுரத்தில் 12, வள்ளியூரில் 9 என்று மொத்தம் 284 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 9 பேரும் அடங்குவர்.

இதனிடையே திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலநீலிதநல்லூர் சார்பதிவாளர் சுப்பிரமணியன் (55) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர் இவர்.

பொதுமக்கள் வர தடை

திருநெல்வேலி மாநகரில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் நேரில் வந்து மனுக்களை அளிப்பதை தவிர்க்கலாம் என்று மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

திருநெல்வேலி மாநகரில் கரோனா தொற்று மிகவேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் வருவதை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் நலன் கருதி தங்கள் புகார் மனுக்களை 7449100100 என்ற வாட்ஸப் எண்ணில் அனுப்பலாம். மேலும தங்கள் புகார்களை மாநகர காவல் கட்டுபாட்டு அறை எண்ணில் 9498181200 0462-2562651 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மக்கள் நலன் கருதி ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த முறையினை பொதுமக்கள் பயன்படுத்தி கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT