தமிழகம்

மயிலாடுதுறை மாவட்டப் பிரிவினை; மக்கள் கருத்துச் சொல்ல தாலுக்கா அலுவலகங்களில் ஆலோசனைப் பெட்டிகள்!

கரு.முத்து

மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பது தொடர்பாக மக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வசதியாக மாவட்ட எல்லைக்குள் உள்ள நான்கு வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் ஜூலை 30-ம் தேதி நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை நகரங்களில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் தங்களது கருத்துகளை மனுவாக எழுதி, கூட்ட அரங்கில் வைக்கப்படும் பெட்டியில் போட வசதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பொதுப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தாங்கள் இருக்கும் ஊரிலேயே மாவட்டப் பிரிப்பு தொடர்பான தங்களின் கருத்துகளைத் தெரிவிக்க வசதியாக ஆங்காங்கே ஆலோசனை மனு பெட்டிகள் வைக்க வேண்டும் எனப் பல தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்ட எல்லைக்குள் வரும் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆலோசனை மனுப் பெட்டிகளை வைக்க வேண்டும் என்றும் சீர்காழி நலம் அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் மாவட்டத் தனி அலுவலரிடம் மனு அளித்தன.

அதனையேற்றுக் கொண்ட தனி அலுவலர் லலிதா, மேற்கண்ட நான்கு வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஆலோசனைப் பெட்டிகளை வைக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இன்று நான்கு வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டன. 29-ம் தேதி மாலை வரையில் மூன்று நாட்களுக்கு இந்தப் பெட்டிகள் அங்கு வைக்கப்பட்டிருக்கும்.

அந்தந்தத் தாலுக்காவுக்குள் வசிக்கும் மக்கள், மாவட்ட உருவாக்கம் குறித்து தங்கள் கருத்துகளை இந்தப் பெட்டிகளில் மனுவாக எழுதிப் போடலாம். 30-ம் தேதி நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளுடன் இந்தப் பெட்டிகளில் போடப்படும் கடிதங்களில் தெரிவிக்கப்படும் விஷயங்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மயிலாடுதுறை மாவட்ட தனி அதிகாரி லலிதா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT