திருச்சி உறையூர் குறத்தெரு அருகே ராமலிங்க நகரில் செயல்பட்டு வந்த பிரபல தனியார் மருத்துவப் பரிசோதனை ஆய்வகத்துக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.
இந்த ஆய்வகத்தில் காய்ச்சல், வைட்டமின், ரத்த அழுத்தம், இதயம், தைராய்டு, நீரிழிவு, பேலியோ, குழந்தையின்மை, திருமணத்துக்கு முந்தைய பரிசோதனை, உடல் பருமன் என அனைத்து வயதினருக்குமான பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரிசோதனைக்கேற்ப ரூ.400 முதல் ரூ.6,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
உலகையே அச்சுறுத்திய கரோனாவை உறுதி செய்யும் பரிசோதனை செய்ய திருச்சி மாவட்டத்தில் அனுமதி பெற்றிருந்த முதல் தனியார் ஆய்வகமாக இது இருந்தது. இதனால், வழக்கத்தைக் காட்டிலும் இங்கு கடந்த சில மாதங்களாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால் கரோனா பரிசோதனை மேற்கொள்ள கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி மாவட்டத்தில் மேலும் 3 தனியார் ஆய்வகங்களுக்கு அரசு அனுமதி அளித்தது.
இதனிடையே, உறையூர் குறத்தெரு அருகே ராமலிங்க நகரில் உள்ள தனியார் மருத்துவப் பரிசோதனை ஆய்வகம் தவறான மருத்துவப் பரிசோதனை அறிக்கை தருவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனால், அங்கு கரோனா பரிசோதனை செய்யத் தடை விதிக்கப்பட்டது. அதேவேளையில், வேறு மருத்துவப் பரிசோதனைகள் அங்கு நடைபெற்று வந்தன.
இந்தநிலையில், அந்த ஆய்வகத்துக்கு இன்று காலை மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்து, யாரும் நுழையாதவாறு தகர ஷீட்டுகள் கொண்டு மறைத்தனர்.
இது தொடர்பாக மாநகராட்சி நகர் நல அலுவலர் எம்.யாழினி, 'இந்து தமிழ்' இணையத்திடம் கூறும்போது, "கரோனா பரிசோதனை முடிவுகளைத் தவறாக அளித்த காரணத்துக்காக அந்த தனியார் மருத்துவப் பரிசோதனை ஆய்வகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் கூறும்போது, "தவறான மருத்துவப் பரிசோதனை அறிக்கை அளித்த காரணத்துக்காக அந்த ஆய்வகத்துக்குத் தடை விதிக்கப்பட்டதுடன், ரூ.5 லட்சமும் அபராதம் விதித்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரிசோதனை ஆய்வகம் செயல்படும் கட்டிடம், மாநகராட்சிக் கட்டிட விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதால் மாநகராட்சி நகரமைப்புப் பிரிவு சார்பிலும், தவறான மருத்துவப் பரிசோதனை அறிக்கை அளித்ததற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆய்வகத்துக்கு இன்று சீல் வைக்கப்பட்டது" என்றார்.