திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் இரு துருவங்களாக செயல்பட்டுவந்த அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகிய இருவருக்கும் மாவட்டத்தை இரண்டாகப்பிரித்து மாவட்டச் செயலாளர் பதவிகளை கட்சித்தலைமை வழங்கியுள்ளது.
அவரவர் பகுதியை அவரவர் நிர்வகிப்பதன் மூலம் கோஷ்டிப்பூசலுக்கு தீர்வுகண்டுள்ளது அதிமுக தலைமை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் சென்றனர்.
இருவரும் தங்கள் அணிக்கான ஆதரவாளர்களைத் திரட்டினர். இரு அணிகளும் ஒன்றிணைந்தபோது இருவருக்கும் மாநில அமைப்புச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
கடந்த சட்டப்பேரவைத் தோல்விக்குப் பிறகு மாவட்டத்தில் கால் ஊன்ற முடியவில்லை என நத்தம் ஆர்.விசுவநாதன் பல இடங்களில் கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
இருந்தபோதும் அவ்வப்போது தனது ஆதரவாளர்களை திருப்திப்படுத்த கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கூட்டுறவுத் தேர்தலில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் ஆதரவாளர்களுக்கும் நேரடிப்போட்டியே ஏற்பட்டு தேர்தலும் நடந்தது.
இருவரின் கோஷ்டிப்பூசலால் மக்களவைத் தேர்தலில் பாரம்பரிய தொகுதியான திண்டுக்கல்லை பாட்டாளி மக்கள் கட்சிக்கு தாரைவார்க்க நேர்ந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுகவை வளர்ச்சி பெறச்செய்ய இருவரையும் ஒன்றிணைத்தால் தான் முடியும் என்ற இக்கட்டான நிலை அதிமுக தலைமைக்கு ஏற்பட்டது. இதற்குத் தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ஒரே மாவட்டமாக இருந்த திண்டுக்கல்லை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்தனர்.
இதில் கிழக்கு மாவட்டச் செயலாளராக நத்தம் ஆர்.விசுவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மாவட்ட செயலாளராக திண்டுக்கல் சி.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் மாநில அளவில் பொறுப்பில் இருந்தவர்கள் தற்போது மாவட்டப் பதவிகளுக்கு மாறியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர், பழநி ஆகிய 4 தொகுதிகள் கிழக்கு மாவட்டமாகவும், திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய 3 தொகுதிகள் மேற்கு மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் மேயர் மருதராஜுக்கு மாநில அமைப்புச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இனிமேலாவது அவரவர் பகுதியை அவரவர் நிர்வகிக்கும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கோஷ்டிப்பூசல் இல்லாதநிலை ஏற்படும் என அதிமுக தலைமை நம்புகிறது.