அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டைத் தர மறுக்க முடியாது என்றும், ஓபிசியினருக்கு மருத்துவப் படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வயிற்றில் பால் வார்ப்பதாக உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
''ஓபிசி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம், தற்போது இருக்கும் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கலாம் என்று கூறியதோடு, இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் வாதத்தை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறுதியிட்டுக் கூறியுள்ளது.
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லாதபோது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் ஓபிசி இட ஒதுக்கீடு பின்பற்றப்படாதது ஏன்? என்ற கேள்வி எழுப்பி, இதுகுறித்து மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டுமென்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இந்தத் தீர்ப்பு சமீபத்தில் இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பட இருந்த பேராபத்தைத் தடுத்து சமூக நீதியை நிலைநாட்டி இருக்கிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்த விதிமுறைகளின்படி அந்தந்த மாநிலங்களில் என்ன ஒதுக்கீடு இருக்கிறதோ, அதைப் பின்பற்ற வேண்டுமென்று தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதே விதிமுறைகளை மீறுகிற வகையில் இந்திய மருத்துவ கவுன்சில் எத்தகைய இட ஒதுக்கீட்டை வழங்குகிறதோ, அந்த அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியிருப்பதை எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இத்தகைய பாரபட்சமான நிலையில் ஓபிசி மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவிகிதம் ஒதுக்கப்படாத காரணத்தால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டு வந்தார்கள். இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வழக்குத் தொடுத்து இன்றைக்கு நீதி கிடைத்திருக்கிறது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டைத் தர மறுக்க முடியாது என்றும், ஓபிசியினருக்கு மருத்துவப் படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வயிற்றில் பால் வார்ப்பதாக உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கிற தீர்ப்பு வரவேற்புக்குரியது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, 12 ஆம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர்களின் சேர்க்கை இருக்க வேண்டும் என்பதே நமது கருத்தாகும். அதேநேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு செயல்படுகிற வகையில் மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.