மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஐந்தாம் நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 27.07.2015 அன்று மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவில் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உயிரிழந்தார்.
கலாமின் உடல் அவர் பிறந்த ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட தேசிய நினைவகத்தை கடந்த 27.07.2017 அன்று பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
ராமேசுவரத்தில் உள்ள பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிடத்தில் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசிமா மரைக்காயர், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
பட விளக்கம்: கலாம் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் சிறப்புப் பிரார்த்தனை செய்தபோது.
இதில் அனைத்து ராமேசுவரம் ஜமாத்தார்களும் கலந்து கொண்டனர். அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவ், சார் ஆட்சியர் சுகபுத்திரன், வட்டாச்சியர் அப்துல் ஜப்பார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால் கடந்த மார்ச் 23 அன்றே ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் தேசிய நினைவகம் மூடப்பட்டது. 126 நாட்கள் கழித்து திங்கட்கிழமை கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு கலாம் நினைவகம் தற்காலிகமாக திறக்கப்பட்டாலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்படவில்லை.
மேலும் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் www.apjabdulkalamfoundation.org இணையதளத்தின் மூலம் நடத்தப்பட்டது.