தமிழகம்

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூட்டு மருத்துவம் தர ஆவன செய்ய வேண்டும்: முனைவர் இறையரசன் கோரிக்கை 

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அலோபதி மருத்துவம் மட்டுமல்லாது சித்த, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி மருத்துவ முறையினர் இணைந்து கூட்டு மருத்துவம் தர ஆவன செய்ய வேண்டும் என்று முனைவர் பா.இறையரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் எழுச்சிப் பேரவையின் செயலர் முனைவர் பா.இறையரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

''சித்த மருத்துவம் மட்டுமல்லாது ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி, அலோபதி மருத்துவ முறையினர் இணைந்து கூட்டு மருத்துவம் புரிதல் இன்றைய கரோனா தொற்றுநோய் பரவும் காலத்தில் உடனடித் தேவையாகும். சென்னையில் தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை, அண்ணா சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கிண்டி கிங்ஸ் நிறுவனம், வியாசர்பாடி அரசு சித்த மருத்துவமனை, சவகர் கல்லூரியில் சித்த மருத்துவர் வீரபாபு தலைமையில் இயங்கும் சித்த மருத்துவமனை ஆகியன கரோனா தொற்றுநோய்க்கு மருத்துவம் நல்குகின்றன.

இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அலோபதி மருத்துவம் மட்டுமல்லாது சித்த, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி மருத்துவ முறையினர் இணைந்து கூட்டு மருத்துவம் தர ஆவன செய்ய வேண்டும். சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் உள்ள தனியார் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் சித்த மருத்துவத்தில் தரப்பெறும் கபசுரக் குடிநீர் கொடுத்துக் கூட்டு மருத்துவம் தருதல் வேண்டும்.

சென்னையிலும் தமிழகத்தின் பிற ஊர்களிலும் உள்ள தனியார் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இன்னும் கரோனாவுக்கு அஞ்சிக் கடையடைத்திருப்பது நல்லதல்ல.

சென்னையிலும் கோவை மதுரை முதலிய பெரிய நகரங்களில் மட்டுமல்லாது, சிறிய ஊர்களிலும் கரோனா அதிகமாகி வருகிறது. மருத்துவம் பற்றியோ அறிவியல் வளர்ச்சி பற்றியோ அறியாத பாமர மக்களுக்கும் பொதுமக்களுக்கும் "அச்சம் கொள்ளாதீர்கள்!"- என்று பரப்பி வருகிறோம்.

தொற்றுநோய் பரவாமல் தடுப்புக்கு உரிய எதிர்ப்பாற்றல் பெற வேண்டுமே தவிர, வந்துவிடுமோ என்று எப்போதும் கவலைப்படுவதோ வந்துவிட்டதே உயிருக்கு ஆபத்து என்று அஞ்சுவதோ வேண்டாம் என்று மக்களுக்கு வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி வழி விளம்பரங்கள் வந்துகொண்டே உள்ளன. மெத்தப் படித்தவர்களும் பல உயிர்களைக் காக்கக்கூடியவர்களும் ஆகிய மருத்துவர்கள் அஞ்சலாமா?

உரிய உடல் கவச ஆடைகளுடன், சத்துணவும் தடுப்பு மருந்துகளும் எடுத்துக்கொண்ட மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவத்துறை ஊழியர்கள் அனைவரும் துணிந்து செயற்பட்டால் விரைந்து இத்தொற்று நோயை விரட்டி விடலாம். உளவியல் படித்த மருத்துவர்களும் அறிவியல் ஆசிரியர்களும் சமூகநல ஆர்வலர்களும் அதிகாரிகளும் இப்பணியில் ஈடுபடுத்தப் பெற வேண்டும்.

மருத்துவமனை அலுவலகம் வீடு ஆகியவற்றில் தூய்மைப் பணி அடிக்கடி மேற்கொள்ளப் பெற வேண்டும்.

கரோனா தொற்றுநோய்ப் பிரிவு தனியே இயங்கவேண்டும். அதேநேரத்தில் மூடிக்கிடக்கும் அல்லது இயங்காத பிற துறைகளும் இயங்கி நுரையீரல், இதயம், விபத்து தொடர்பான அவசர மருத்துவப் பிரிவு தனியாகவும் சாதாரண இருமல், சுரம், வலி தொடர்பான நோய்களுக்கான மருத்துவம் தனியாகவும் கட்டாயம் இயங்க வேண்டும்.

தமிழக அரசு உதவியுடன், மருத்துவர் வீரபாபு தனியே ஓர் பொறியியல் கல்லூரியில் 200 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவப் பிரிவு தொடங்கி, இதுவரை 1,000 பேருக்குமேல் காப்பாற்றி, மேலும் மேலும் பலரை முழு நலம் பெற்றுச் செல்லச் செய்து வருகிறார்.

இதேபோல் ஆங்காங்கு நகரங்களிலும் சிற்றூர்களிலும் உள்ள சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் செய்திட முன் வரலாமே! இதனால் கூட்டு மருத்துவம் வெற்றி பெறும். தமிழ்நாட்டின் சித்த மருத்துவம் உலகப் புகழ் பெறும்''.

இவ்வாறு இறையரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT