சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே குருவிகளை பாதுகாக்க கிராம மக்கள், 45 நாட்கள் தெரு விளக்குகளை எரியவிடாமல் இருளில் வாழ்ந்த நெகிழ வைத்த சம்பவம் நடந்துள்ளது.
மரங்களை வெட்டுதல், பறவைகளை வேட்டையாடுதல், அதிகரிக்கும் மொபைல் போன் டவர்கள், நகரமயமாக்கல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றால் பறவையினங்கள் அரிதாகி வருகின்றன.
இந்நிலையில், குருவிகளுக்காக சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமமே 45 நாட்கள் இருளில் வாழ்ந்த நெகிழ வைத்த சம்பவம் நடந்துள்ளது.
மறவமங்கலம் அருகே சேதம்பல் ஊராட்சியில் அமைந்துள்ளது பொத்தக்குடி கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். இக்கிராமத்தில் உள்ள 22 தெரு விளக்குகளை இயக்குவதற்கான சுவிட்ச் பெட்டி ஒரு மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 45 நாட்களுக்கு முன்பு, இப்பெட்டியில் வண்ணாத்திக்குருவி ஒன்று கூடு கட்டி முட்டையிட்டிருந்தது. சுவிட்சை இயக்க இளைஞர்கள் சென்றபோது, பயத்தில் அந்தக் குருவி அங்கும், இங்குமாகத் தாவி பரிதவித்தது.
இதைப் பார்த்த இளைஞர்கள் குருவிக் கூட்டை கலைக்க மனமின்றி சுவிட்சை இயக்குவதை நிறுத்தினர். மேலும் குருவி அடைகாத்து குஞ்சுகளுடன் வெளியேறும் வரை சுவிட்சை இயக்க வேண்டாம் என கிராமப் பெரியவர்களிடம் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து சுவிட்சை இயக்காததால் ஒட்டுமொத்த கிராமமே தெரு விளக்குகள் எரியாமல் பல நாட்களாக இருளில் மூழ்கியது.
இதற்கிடையே குருவி அடைகாத்து 3 குஞ்சுகளைப் பொறித்தது. தாய் குருவியும், குஞ்சுகளும் பயப்படாமல் இருக்க சுவிட்ச் பெட்டி அருகே யாரும் நடந்து செல்லக்கூட இளைஞர்கள் தடை விதித்தனர்.
45 நாட்கள் கடந்த நிலையில் நேற்று முன்தினம் தாய் குருவியும், குஞ்சுகளும் பறந்தன. அவற்றை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர். அதன் பிறகே தெரு விளக்குகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. பொத்தக்குடி கிராமத்தினரின் இந்த மனிதாபிமான செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பொத்தகுடியைச் சேர்ந்த கருப்புராஜா கூறியதாவது: வண்ணாத்திக்குருவி போன்ற பறவையினங்கள் அரிதாகி வருகின்றன. அந்த இனங்களைப் பாதுகாப்பது நமது கடமை. எனவே, இந்த குருவிகளுக்காக தெரு விளக்குகளை எரியவிடாமல் 45 நாட்கள் இருளில் வாழ்ந்தது சுமையாகத் தெரியவில்லை. இக்குருவிகள் எங்கள் கிராம மக்களை ஒற்றுமைப்படுத்தி விட்டன என்றார்.