தமிழகம்

5 சிபிஐ அதிகாரிகளுக்கு கரோனா: சாத்தான்குளம் வழக்கு விசாரணையில் தொய்வு

செய்திப்பிரிவு

சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளில் 5 பேருக்கு கரோனா பாதித்துள்ளதால் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ கூடுதல் டிஎஸ்பி சுக்லா தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.

பின்னர் இவ்வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் இருக்கும் ஆய்வாளர் தர் உட்பட 10 பேரில் 8 பேரை அடுத்தடுத்து காவலில் எடுத்து விசாரித்தனர்.

கரோனா பரிசோதனை

இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள், கைதிகள் 10 பேர், மதுரை சிபிஐ அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஜூலை 22-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் சச்சின், சைலேஷ் குமார் மற்றும் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற மதுரை ஆயுதப்படை காவலர் ஒருவருக்கும் கரோனா உறுதியானது. மேலும், பவன்குமார், அஜய்குமார் ஆகிய சிபிஐ அதிகாரிகளுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து மதுரை சிபிஐ அலுவலகத்தில் பணிபுரிந்த 40-க்கும் மேற்பட்டோருக்கும் கரோனா பரிசோதனை நடந்தது.

மதுரை சிபிஐ அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாகவே குறைந்த நபர்களே பணிக்குச் செல்கின்றனர். இது போன்ற சூழலில் சாத்தான்குளம் வழக்கு விசாரணை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

வழக்கில் கைதானோரைக் காவலில் எடுத்து விசாரணை, சாத்தான்குளம் காவல்நிலையம், கோவில்பட்டி சிறை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என சிபிஐ விசாரணை வேகமெடுத்த நிலையில் 5 அதிகாரிகளுக்கு கரோனா பாதிப்பால் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. மதுரை சிபிஐ அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாகவே குறைந்த நபர்களே பணிக்குச் செல்கின்றனர். சாத்தான்குளம் வழக்கு விசாரணை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT