பொறியியல் கல்லூரிகளின் தரம்குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் போலியானது என்று அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூலை 15-ம்தேதி தொடங்கி நடைபெற்று வரு கிறது. இதுவரை 1.2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில் மாநிலம் முழுவதும் 89 தரமற்றபொறியியல் கல்லூரிகள் உள்ளதாகவும், அதில் மாணவர்கள் சேர வேண்டாம் எனவும் அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இந்த விவகாரம் சர்ச்சையானது. இதையடுத்து அந்த செய்திகள் போலியானது என்று அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக பல்கலை. பதிவாளர் கருணாமூர்த்தி, அனைத்து துறைத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
சமூக வலைதளங்கள் மற்றும் பொதுவெளியில் பல்கலைக்கழகம் மீது புகார் கூறுதல், நிர்வாகம் சார்ந்த சுற்றறிக்கைகள், பொய்யான செய்திகளை பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது பல்கலை. விதிகள் மற்றும் அரசுப் பணியாளர் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பான செயலாகும்.
இத்தகைய செயல்களில் ஈடுபடும் பேராசிரியர்கள், ஊழியர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், பொதுவெளியில் அல்லது சமூக வலைதளங்கள் மூலம் பல்கலை. மாண்பைக் குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. பல்கலை. மாண்பை குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரை செய்யப்படும்.