பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

கரோனா பரவலைத் தடுக்க திருச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி; அனைத்துச் சாலைகளும் அடைப்பு

ஜெ.ஞானசேகர்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள ஊட்டத்தூர் ஊராட்சி முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. இன்று (ஜூலை 26) வரை 3,420 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனனர். 58 பேர் உயிரிழந்த நிலையில், 1,201 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அந்தவகையில், லால்குடி அருகேயுள்ள ஊட்டத்தூர் ஊராட்சி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக இன்று அறிவிக்கப்பட்டது.

லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட ஊட்டத்தூர் ஊராட்சியில் கடந்த மாதம் இளைஞர் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதியானது. அவர் மூலம் 5 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஊராட்சியில் ஏராளமானோருக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இவர்கள் சுற்றுப்பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சேர்ந்தனர். இதில், வயதான 6 பேர் உயிரிழந்தனர். இதனால், ஊராட்சி மக்களிடையே பதற்றம் நிலவி வந்தது.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஊராட்சியில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் 23 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். அதில், இருவரைத் தவிர எஞ்சிய அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.

இந்தநிலையில், ஊராட்சியில் மேலும் சிலருக்குக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பிற ஊராட்சிகளுக்குக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் ஊட்டத்தூர் ஊராட்சி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக இன்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஊட்டத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் ஊராட்சிக்கு வந்து செல்லும் நம்புக்குறிச்சி சாலை, திரணிபாளையம் சாலை, பாடாலூர் சாலை, நெய்குளம் சாலை ஆகியவை மூடப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டன. சிறுகனூர் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT