வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் எமன் வேடமணிந்து பொதுமக்களுக்குக் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர். 
தமிழகம்

வாணியம்பாடியில் எமன் வேடத்தில் கரோனா விழிப்புணர்வு நாடகம் நடத்திய காவல்துறையினர்

ந. சரவணன்

வாணியம்பாடியில் எமன் வேடம் அணிந்து வாகன ஓட்டிகளுக்குக் கரோனா குறித்த விழிப்புணர்வு நாடகத்தை காவல்துறையினர் நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக கிராமப் பகுதிகளில் பொதுமக்களிடம் கரோனா குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் திருப்பத்தூர் எஸ்.பி.விஜயகுமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, வாணியம்பாடி சரக மதுவிலக்கு தடுப்புப்பிரிவு காவல்துறையினர் மற்றும் டவுன் காவல்துறையினர் இணைந்து கரோனா விழிப்புணர்வு மற்றும் மதுவிலக்கு விழிப்புணர்வு நாடகத்தை இன்று (ஜூலை 26) வாணியம்பாடியில் பல்வேறு இடங்களில் நடத்தினர்.

வாணியம்பாடி கோணாமேடு, பைபாஸ் சாலை, மாதகடப்பா மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு நாடகத்தை வாணியம்பாடி டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இதில், திருப்பத்தூர் கலைக்குழுவினருடன், காவல்துறையினரும் இணைந்து எமன் போன்ற வேடமணிந்து விழிப்புணர்வு நாடகத்தை நடத்தியும், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசம் அணிவது குறித்தும், மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், வாணியம்பாடி மதுவிலக்கு தடுப்புப்பிரிவு ஆய்வாளர் செங்குட்டுவன், டவுன் காவல் ஆய்வாளர் சந்திரசேகர், உதவி காவல் ஆய்வாளர்கள் யுவராஜ், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT