எஸ்.சுந்தர் 
தமிழகம்

சொந்த பிராண்ட் உருவாக்கம் வெற்றியைத் தரும்; நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் கருத்தரங்கில் தகவல்

ஆர்.கிருஷ்ணகுமார்

கரோனா வைரஸ் தொற்றுக்குப் பிந்தைய காலகட்டம் உணவுப்பொருள் வணிகத்துக்குப் பொற்காலம். எனவே, சொந்தமாக பிராண்ட் உருவாக்குவது வெற்றியைத் தேடித் தரும் என்று நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில், 'கரோனா வைரஸ் தொற்றுக்குப் பின் வணிக மாற்றமும், அணுகுமுறையும்' என்ற தலைப்பிலான காணொலிக் கருத்தரங்கம், சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எம்.கணேஷ்ராம் தலைமையில் இன்று (ஜூலை 26) நடைபெற்றது. காணொலிக் காட்சி வழியாக நடைபெற்ற இக்கருத்தரங்கில், நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க அனைத்து மாவட்ட நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய சங்க மாநிலத் தலைவர் பி.எம்.கணேஷ்ராம், "கரோனா காலத்திலும் சரி, கரோனாவுக்குப் பிந்தைய காலத்திலும் சரி உணவுப்பொருள் விநியோகத்துக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது. வணிகர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, தனிமனித இடைவெளியைப் பின்பற்றியும், முகக்கவசங்கள் அணிந்தும் வணிகத்தில் ஈடுபட வேண்டும்" என்றார்.

பி.எம்.கணேஷ்ராம்

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, கோவையைச் சேர்ந்த வணிக மேலாண்மை ஆலோசகரும், பிஸ்நெட் சொல்யூஷன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியுமான எஸ்.சுந்தர் பேசும்போது, "எஃப்.எம்.சி.ஜி. எனப்படும் நுகர்பொருள் விநியோகத் துறையைச் சேர்ந்தவர்கள், கரோனா ஊரடங்கு காலத்தில் வணிகம் குறித்த எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. எப்போதும் உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும்.

இந்தக் காலகட்டத்தில் கிராமப்புற வணிகத்தில் அதிக கவனம் செலுத்துவது, வியாபார வளர்ச்சியை அதிகரிக்கும். இத்துறைக்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. கரோனாவுக்குப் பிந்தைய காலத்தை நுகர்பொருள் வணிகத்தின் பொற்காலம் என்றே கூறலாம். விற்பனை இலக்கை அடைவதில் செலுத்தும் கவனத்தை சொந்த தயாரிப்பு உருவாக்குவதிலும் செலுத்த வேண்டும். சொந்தமாக ஒரு பிராண்ட் உருவாக்குவது வெற்றியைத் தேடித் தரும்" என்றார்.

SCROLL FOR NEXT