டிடிவி தினகரன்: கோப்புப்படம் 
தமிழகம்

இயற்கை வளத்துக்கும் விவசாயத்துக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினைத் திரும்பப் பெறுக; தினகரன்

செய்திப்பிரிவு

இயற்கை வளத்திற்கும், விவசாயத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் இன்று (ஜூலை 26) வெளியிட்ட அறிக்கை:

"இயற்கை வளங்களுக்கும் விவசாயத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அம்சங்கள் நிறைந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை (Environmental Impact Assessment – EIA Draft 2020) மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

புதிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தொடங்குவதற்குச் சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதியை வழங்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முன் மொழிந்திருக்கிறது. அவற்றில் பெரும்பாலானவை மக்களுக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் பேராபத்துகளை விளைவிக்கக் கூடியவையாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தப் புதிய வரைவின்படி, புதிதாகத் தொழில் தொடங்கவரும் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) பெறாமலேயே தொழில் தொடங்கிவிட்டு பிறகு அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதை எப்படி ஏற்க முடியும்?

இதுவரை 50 ஆயிரம் சதுர அடிக்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியைப் (EIA clearance) பெற வேண்டும் என்றிருப்பதை 1 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி வரை இனிமேல் அனுமதியே இன்றி கட்டுமானங்களைச் செய்து கொள்ளலாம் என்று மாற்றுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடாதா?

ராணுவத் திட்டங்களுக்கு மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த Strategic என்ற பதத்தைப் பயன்படுத்தி, இனி எந்தத் திட்டத்தை வேண்டுமானாலும் அறிவித்துக் கொள்ளலாம் என்று இந்த வரைவில் கூறப்பட்டிருக்கிறது. இப்படிச் செய்துவிட்டால் அத்திட்டம் குறித்த தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பது ஜனநாயக நாட்டில் மிகத்தவறான முறையாகிவிடாதா?

இதை எல்லாம் விட முக்கியமாக தொழிற்சாலை அல்லது நிறுவனம் தொடங்குவது பற்றிய விளம்பர அறிவிப்பை இனிமேல் மாநில நாளிதழ்களில் வெளியிட வேண்டாம்; ஒரே ஒரு தேசிய நாளிதழில் கொடுத்தால் போதும் என்றும், அதைப் பார்த்துவிட்டு தொழிற்சாலை அல்லது நிறுவனம் அமையும் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 20 நாட்களுக்குள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்பது உட்பட இந்த வரைவில் உள்ள பல திருத்தங்கள் மக்களின் உரிமையைப் பறிப்பதோடு, இயற்கை வளங்களையும், விவசாயத்தையும் பாதிப்பதாக உள்ளன.

எனவே, மக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை (EIA Draft 2020) மத்திய அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும். தமிழக அமைச்சரவையைக் கூட்டி இந்த வரைவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டுமென்று பழனிசாமி அரசையும் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT