பருவநிலை மாற்றங்களின் போது இலங்கையிலிருந்து வண்ணத்துப் பூச்சிகள் தமிழகத்துக்கு வலசை வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
விலங்கியல் மற்றும் தாவர வியல் பேராசிரியர்கள், பறவையி யலாளர்கள், சூழலியல் செயல் பாட்டாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து மதுரையில் ‘சூழலியல் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். மதுரையைச் சுற்றியுள்ள மலைகள், காடுகள், ஏரிகளில் உள்ள பறவைகள் மற்றும் இங்கு வலசை வந்து போகும் பறவைகள், பூச்சிகள் குறித்து கடந்த 11 மாதங்களாக இவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்காக ஞாயிறு தோறும் 20 பேர் கொண்ட குழு மதுரையைச் சுற்றியுள்ள காடுகளில் அதிகாலை முதல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து பேசும் சூழலியல் பேரவையின் ஒருங்கிணைப் பாளரும் பறவையியலாளருமான என்.ரவீந்திரன், “அரசின் புள்ளி விவரப்படி தமிழகத்தில் 512 வகையான பறவைகள் உள்ளன. மதுரைப் பகுதியில் நாங்கள் நடத்திய ஆய்வில், இதுவரை 248 வகையான பறவைகளை அடையாளப்படுத்தி இருக்கிறோம். யார் மூலமாவது காடுகளுக்கு தீங்கு வந்தால் குக்குருவான் என்ற குருவி விநோத ஒலி எழுப்பும். அந்நியர்களை பார்த்து கத்துவதால், பளியர் பழங்குடியினர் இதை, ‘திட்டுவான் குருவி’ என்கின்றனர்.
கீழை நாடுகளில் தகைவிலான் என்றொரு பறவை இனம் உண்டு. நமக்கு பருவ மழை தொடங்கு வதற்கு முன்பாக அந்தப் பறவைகள் இங்கே வலசை வருகின்றன. அவற்றின் வரத்து அதிகமாக இருந்தால் அந்த ஆண்டும் மழைப்பொழிவு அதிக மாக இருக்கும். இதுபோன்ற கல்வியைத்தான் நாம் நமது பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் அரிதாகிவிட்ட லகுடு பறவை, கருடவாத்து, நீலகண்ட பறவை உள்ளிட்டவையும் மதுரை வனங்களில் இருப்பதை உறுதிப் படுத்தி இருக்கிறோம்.
பறவைகள் மட்டுமின்றி பருபலா வெள்ளையன், வெண்புள்ளி கருப்பன், மயில் அழகி, நீல வசீகரன் என 70 வகையான வண்ணத்துப் பூச்சிகளும் இங்கு உள்ளன. ஜூனிலிருந்து ஆகஸ்ட் வரை இலங்கையிலிருந்து 7 விதமான வண்ணத்துப் பூச்சிகள் தமிழகத் துக்கு வலசை வருகின்றன. மதுரை வனப்பகுதிக்கும் அவை வருவது ஆய்வில் கிடைத்திருக்கும் அரிய தகவல்.
தங்களுக்கான உணவுச் சூழல் வளமாக இல்லாவிட்டால் பறவைகள் அடுத்த இடம் தேடிப் போய்விடும். எனவே ஓரிடத்தின் இயற்கை வளத்தை ஆய்வு செய்ய வேண்டுமெனில் அங்கு வசிக்கும் பறவைகளை ஆய்வு செய்தால் போதுமானது’’ என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய மற்றொரு ஒருங்கிணைப்பாளரும் சூழலிய லாளருமான தமிழ்தாசன், “அரிட்டாபட்டி மலை, கூககத்தி மலை, கழுகு மலை உள்ளிட்ட மலைகளில் 10 வகையான கழுகு களை அடையாளப்படுத்தி இருக்கி றோம். ஒருகாலத்தில் கழுகு மலையில் நிறைய தேன் கூடுகள் இருந்தன. அதனால் அங்கு தேன் பருந்துகளின் வரத்தும் அதிகமாக இருந்தது. இப்போது, கிரானைட்டுக் காக மலைகள் உடைக்கப்பட்டு விட்டதால் தேன்கூடுகளும் தேன் கழுகுகளும் அரிதாகிவிட்டன.
இதேபோல், இடையபட்டி வெள்ளிமலை கோயில் காட்டில் தேவாங்குகளும் நரிகளும் அதிக மாக இருந்தன. குவாரி வெடி களுக்குப் பயந்து அவை அங்கி ருந்து ஓடிவிட்டன. மதுரை வனங்களில் புள்ளி மான்களும் காட்டுப்பன்றிகளும் இருப்பதை எங்களது ஆய்வில் உறுதிசெய்யப் பட்டுள்ளது. இதுபோன்ற ஆய்வு களை தமிழகம் முழுவதும் நடத்தினால் இயற்கையிடமிருந்து நல்ல தொரு பாடத்தை நாம் படித்துக் கொள்ள முடியும்” என்றார்.