மாநில மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு செல்லும் அவசர சட்டத்தை திரும்பப் பெற வேண்டு்ம் என்று மத்திய அரசுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல சான்றோரின் உதவியால், உழைப்பால் உருவான 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கூட்டுறவு வங்கிகள், தற்போது ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேலான தொகையைக் கையாளும் அளவுக்கு சிறப்பானதாகவும், கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகவும் இருக்கும்போது, கூட்டுறவு வங்கியை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு செல்லும் மத்திய அரசின் முடிவு ஏற்புடையதல்ல. இந்த அவசர சட்டத்தால் மக்களுக்கு குறைந்த வட்டிவிகிதத்தில் கடன்கள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்காது என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
அடித்தட்டு மக்கள், சிறுதொழில்கள், விவசாயிகள் ஆகியோருக்கு ஆதாரமாக விளங்கும் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பிறப்பித்த அவசர சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.