திருச்சியில் கடந்த ஒரே வாரத்துக்குள் 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரேனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 50-ஐ கடந்துவிட்டது.
தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கடந்த ஜூலை 17-ம் தேதி வரையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,004 ஆக மட்டுமே இருந்தது. அதன்பின் அடுத்த ஒரு வாரத்துக்குள் இந்த எண்ணிக்கை மேலும் 1,000-ஐத் தாண்டிவிட்டது. இன்றைய நிலவரப்படி திருச்சி மாவட்டத்தில் 3,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது, வெளிநாடு மற்றும் வெளியூரில் வந்தவர்கள் மூலம் திருச்சி மாநகரில் வசிப்பவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். ஊரகப் பகுதிகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாகப் பாதிப்பு காணப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த நிலை மாறி ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவது அவர்களிடம் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஒரே நாளில் 199 பேர் பாதிப்பு
திருச்சி மாநகர் தவிர்த்த ஊரகப் பகுதிகளில் கடந்த ஜூலை 17-ம் தேதி 867 ஆக இருந்த மொத்த எண்ணிக்கை 22-ம் தேதி 1058, 24-ம் தேதி 1,149 எனப் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது.
நேற்றைய நிலவரப்படி ஒன்றியம் வாரியாக அந்தநல்லூரில் 52, லால்குடியில் 104, மண்ணச்சநல்லூரில் 149, மணப்பாறையில் 182, மருங்காபுரியில் 98, முசிறியில் 79, புள்ளம்பாடியில் 60, தாத்தையங்கார்பேட்டையில் 49, திருவெறும்பூர் ஒன்றியத்தில் 94, தொட்டியத்தில் 29, துறையூரில் 69, உப்பிலியபுரத்தில் 48, வையம்பட்டியில் 32, துவாக்குடி நகராட்சியில் 3 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநகரைப் பொறுத்தமட்டில் அரியமங்கலம் கோட்டத்தில் 465, கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் 562, பொன்மலைக் கோட்டத்தில் 412, ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 473 பேர் என 1,912 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர இன்று திருச்சி மாவட்டத்தில் புதிதாக 199 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
உயிரிழப்பு 57 ஆக உயர்வு
கரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைப் போலவே உயிரிழப்போர் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து தற்போது அரை சதத்தைக் கடந்து விட்டது. நேற்று முன்தினம் வரை அரியமங்கலம், ஸ்ரீரங்கம் கோட்டங்களில் தலா 7, கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் 11, பொன்மலை கோட்டத்தில் 8 என திருச்சி மாநகரில் 33 பேரும், அந்தநல்லூரில் 3, மணப்பாறை, மணிகண்டத்தில் தலா 2, மருங்காபுரி, திருவெம்பூரில் தலா 4, தொட்டியம், துறையூர், உப்பிலியபுரத்தில் தலா 1 என ஊரகப் பகுதிகளில் 18 பேர் என 51 பேர் உயிரிழந்திருந்தனர். இன்று 6 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம் இந்த எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.
ஊரகப் பகுதி மக்கள் அலைக்கழிப்பு
மாநகரில் கரோனா சிகிச்சைக்கான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அதிகமாக உள்ளன. மேலும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை, சுகாதாரத்துறை ஆகியவை சார்பில் மாநகரில் ஆங்காங்கே கரோனா தடுப்பு நடவடிக்கைகள், காய்ச்சல் கண்டறியும் முகாம் போன்றவையும் நடத்தப்படுகின்றன.
ஆனால் மாநகரை ஒப்பிடும் அளவுக்கு ஊரகப் பகுதிகளில் போதுமான அளவுக்குத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும், காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வோர் போதிய சிகிச்சை மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லாமல் அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுவரை 2,096 பேர் டிஸ்சார்ஜ்
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ’’ஊரகப் பகுதிகளில் கரோனா வைரஸ் பாதிப்போர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருப்பது உண்மைதான். மாநகரைப் போலவே அங்கும் கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தீவிரமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. கரோனா பாதிக்கப்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்படும் நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து பார்வையிட்டு வருகிறார்.
ஒவ்வொரு கிராமங்களிலும் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களில் கரோனா அறிகுறி இருப்பவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை பாதிப்பு கண்டறியப்பட்ட 3,289 பேரில் 2,096 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,136 பேருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.