ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், ஏர்வாடி தர்கா ஆகியவற்றிற்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டிய மும்பையை சார்ந்த இளைஞர் மீது ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக புகார் தெரிவிக்க 9489719722 என்ற பிரத்யேக வாட்ஸ் அப் அலைபேசி எண் பயன்பாட்டில் உள்ளது.
இந்த எண்ணிற்கு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், ஏர்வாடி தர்கா ஆகியவற்றிற்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது குறித்து சமூக வலைதள பிரிவு போலீசார் கண்காணித்து வந்தனர். விசாரணையில் மும்பை மலாட் வளனை காலனியைச் சேர்ந்த லோகநாதன் மகன் ராஜா ஹரிஜான் என்பவர் வாட்ஸ் அப் எண்ணிலிருந்து இந்த மிரட்டல் வந்தது தெரிய வந்தது.
இது குறித்து ராமநாதபுரம் டவுன் காவல்நிலையத்தில் சமூக வலைதள பிரிவு காவலர் கலைவாணன் இன்று புகார் அளித்தார். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ராஜா ஹரிஜான் மீது 8 பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.