காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,977 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழக-கர்நாடக எல்லையில் காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மேலும், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று (ஜூலை 24) விநாடிக்கு 4,710 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று (ஜூலை 25) காலை விநாடிக்கு 4,977 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 66.42 கன அடியாகவும், நீர் இருப்பு 29.70 டிஎம்சியாகவும் உள்ளது.