சாத்தான்குளம் போலீஸார் தாக்கியதில் மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, அந்த இளைஞரின் உறவினர்களிடம் சிபிசிஐடி போலீஸார் இன்று விசாரணை நடத்தினர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சாத்தான்குளம் போலீஸார் தாக்கியதில் மற்றொரு இளைஞர் உயிரிந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளத்தை சேர்ந்த சுந்தரம் மகன் மகேந்திரன் (28) என்பவர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாகக் கூறி, அவரது தாய் வடிவு தாக்கல் செய்த மனு மீது மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த புகார் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
சிபிசிஐடி டிஎஸ்பி அணில்குமார் தலைமையிலான போலீஸார் ஏற்கெனவே மகேந்திரனின் தாய் வடிவு, சகோதரி சந்தனமாரி ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் டிஎஸ்பிஅணில்குமார் தலைமையில் சிபிசிஐடி போலீஸார் இன்று பேய்குளம் வந்தனர். அங்குள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து தங்களது விசாரணையை தொடங்கினர்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருக்கும் மகேந்திரனின் சகோதரர் துரையிடம் சுமார் 2 மணி நேரம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து மகேந்திரனின் உறவினர்கள் சிலரை அழைத்து விசாரணை நடத்தி அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். மதியம் 12 மணியளவில் தொடங்கிய இந்த விசாரணை, மாலை வரை தொடர்ந்தது.