காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலைக்கு, தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.21 கோடியை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொருளாளர் ஏ.நாகப்பன், அரூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ டில்லிபாபு ஆகியோர் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலர் கே.நேரு, கரும்பு விவசாயிகள் சங்க செயலர் வி.கே.பெருமாள் உள்ளிட்டோர், மின்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், பழைய சீவரத்தில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கடந்த 2014-15-ம் ஆண்டு அரவைக்காக சுமார் 2 ஆயிரம் விவசாயிகள் கரும்பு வழங்கியுள்ளனர். அதற்கான தொகை ரூ.11 கோடியை கடந்த 9 மாதங்களாக ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது செப்டம்பர் 5-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை முழுமையாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கிவிடு வதாக ஆலை நிர்வாகம் எழுத் துப்பூர்வமாக தெரிவித்திருந்தது. எனினும், இதுவரை நிலுவைத் தொகை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.
ஆலை நிர்வாகத்தை கண்டித்து கடந்த செப்டம்பர் 7-ம் தேதி ஆலை முன்பு போராட்டம் நடத்தினோம். அப்போது எங்களை அழைத்து பேசிய ஆலை நிர்வாகம் “சர்க்கரை ஆலையின் மின் உற்பத்தியிலிருந்து தமிழ்நாடு மின் வாரியத்துக்கு வழங்கிய மின்சாரத்துக்கு ரூ.21 கோடி வரவேண்டியுள்ளது. அதை வழங்குமாறு மின் வாரியத்திடம் கேட்டுள்ளோம். அத்தொகை மின் வாரியத்திலிருந்து வந்தவுடன், கரும்பு நிலுவைத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும்” என்று தெரிவித்தது.
அதனால், மின்சாரத் துறை அமைச்சர், தனியார் சர்க்கரை ஆலைக்கு வழங்க வேண்டிய, மின்சாரம் வழங்கியதற்கான நிலுவைத் தொகை ரூ.21 கோடியை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் உறுதி
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் சங்க செயலர் கே.நேரு கூறியதாவது: ‘விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்துக்கு மின் வாரியம் தர வேண்டிய தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அத்தொகையை விவசாயிகளின் நிலுவைத் தொகையை வழங்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஆலை நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்படும்’ என அமைச்சர் உறுதியளித்துள்ளதாக அவர் கூறினார்.