நாகர்கோவில் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் கரோனாவால் முகநூல் நிகழ்ச்சித் தொகுப்பாளராகி அதன்மூலம் தனது தொகுதி மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகிறார்.
கரோனா தொற்று குறித்தும், அதில் இருந்து மீள்வது, தடுப்பு நடவடிக்கைகள், நிறுவனங்கள், தொழிலாளர்களின் மீட்பு குறித்து மக்கள் மனதில் எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சுரேஷ்ராஜன் நெறியாளராக இருந்து, விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். இதில், திமுகவின் மருத்துவ அணியைச் சேர்ந்த மருத்துவர் வள்ளுவன் சங்கரலிங்கம், தொழிலதிபர் சுஜின் ஆகியோர் பதில் அளித்துள்ளனர்.
அரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த நிகழ்ச்சியை சுரேஷ்ராஜன் பிரபலக் காட்சி ஊடக நெறியாளர்களுக்கு இணையாகத் தொய்வின்றி நகர்த்திச் செல்கிறார். இதை அவர் தனது முகநூலில் வீடியோவாகப் பதிவேற்றிய சில மணி நேரத்திலேயே 30 ஆயிரம் பின்னூட்டங்கள் வந்து குவிந்திருக்கின்றன.
இது குறித்து நம்மிடம் பேசிய சுரேஷ்ராஜன், “கரோனா குறித்து மக்களுக்கு பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. குமரி மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மாலை 5 மணியோடு மூடப்பட்டு விடுகின்றன. டாஸ்மாக் கடை மட்டும் 8 மணிவரை செயல்படுகிறது. திடீரென்று பேருந்தை ஒரு மாத காலத்துக்கு மீண்டும் நிறுத்தி வைக்கிறார்கள். கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு, நாள் கூடிவருகிறது. இதெல்லாம் சேர்ந்து மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கத்தில் கரோனா நோயாளிகளுக்குச் சத்தான உணவு கொடுப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு வருகிறது.
கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டிருக்கும் இந்த சூழலிலும் சமூகப் பரவல் குறித்து அரசு வாய் திறக்கவில்லை. இதற்கு மத்தியில் கரோனாவுக்கான தடுப்பூசி எப்போதுவரும்... எப்படியெல்லாம் பரவும்? அரசு இனியும் என்னவிதமான தடுப்பு நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும் என்பன உள்பட ஏராளமான கேள்விகள் மக்கள் மனதில் இருக்கின்றன. அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாகத்தான் இந்த விவாத நிகழ்ச்சியை நடத்தினேன்.
அதேநேரத்தில் பெருவாரியான தொகுதி மக்களுடனான சந்திப்புக்கு இணையம் பாலம் அமைத்திருக்கிறது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் திமுக சார்பில் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாத நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம்” என்றார்.