என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் புதுச்சேரி சட்டப்பேரவை முழுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வழக்கமாக பேரவை நிகழ்வுகள் நடைபெறும் அரங்கு முதல்முறையாக மூடப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் தாக்கல் கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. அதையடுத்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரை நேற்று (ஜூலை 24) சட்டப்பேரவை அரங்கில் நடைபெற்றது. எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தரப்பினர் நேற்றுதான் முழுமையாக பங்கேற்றனர். அதில் பங்கேற்ற எதிர்க்கட்சி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏவும், அக்கட்சியின் செயலாளருமான ஜெயபாலுக்கு கரோனா தொற்று உறுதியானது. தற்போது ஜிப்மரில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் முழுக்க இன்று (ஜூலை 25) கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதையடுத்து, சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் அரங்கு முதல்முறையாக இன்று மூடப்பட்டது. இரு நாட்களுக்கு இந்த அரங்கு மூடியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கரோனா தொற்று உறுதியாகி ஜிப்மரில் உள்ளார். அதளால், பட்ஜெட் கூட்டத்தொடரை குறுகிய காலத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். ஐந்து நாட்கள் கழித்துதான் கரோனா அறிகுறி தெரியும் என்பதால் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் வரும் திங்களன்று (ஜூலை 27) கரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனை நடைபெற உள்ளது.
பட்ஜெட்டை நிறைவேற்றினால்தான் நலத்திட்ட உதவிகள் செய்ய முடியும் என்பதால்தான் சனி, ஞாயிறும் பட்ஜெட் கூட்டத்தை நடத்த முடிவு எடுத்துள்ளோம். நான்காவது தளத்தில் உள்ள கமிட்டி அரங்கில் நடத்துவது தொடர்பாக சபாநாயகர் முடிவு எடுப்பார்" என்று தெரிவித்தார்.