மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.சுதர்சனன். இவரது ஒரே மகன் நரேஷ்(25). பொறியியல் படிப்பு முடித்த நரேஷ், சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஓராண்டு பணி புரிந்தார். காய்ச்சல் காரணமாக ஊருக்கு வந்திருந்தார்.
கடந்த 6-ம் தேதி திருவாரூர் சென்ற நரேஷ், அன்று நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, கொரடாச்சேரி தேவர்கண்டநல்லூர் சாலை திருப்பத்தில் கட்சிக் கொடிமேடை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் நரேஷின் தலையில் பலத்த காயமேற்பட்டது.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நரேஷுக்கு நேற்றுமுன்தினம் அதிகாலை மூளைச்சாவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க பெற்றோர் முன்வந்தனர். சிறப்பு மருத்துவக் குழுவினர் அவரது 2 கண்கள், 2 சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை நேற்று பிற்பகல் அகற்றினர். சென்னை ஃபோர்டீஸ் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு அவரது இதயமும், சென்னை குளோபல் மருத்துவ மனை நோயாளிக்கு கல்லீரலும், ஒரு சிறுநீரகம் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை கிட்னி மைய நோயாளிக்கும், 2 கண்கள் திருச்சி ஏ.ஜி. மருத்துவமனை நோயாளிகளுக்கும் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதயம் வைக்கப்பட்ட பெட்டி பிற்பகல் 3.30 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கல்லீரலை தனி ஆம்புலன்ஸ் மூலம் சாலை வழியே சென்னைக்கு எடுத்துச் சென்றனர். இதேபோல, மற்ற உறுப்புகளும் கார்களில் எடுத்துச் செல்லப்பட்டன. நரேஷின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேர் பயனடைந்தனர்.