தமிழகம்

தூத்துக்குடியில் ஒரே நாளில் 313 பேருக்கு கரோனா: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடியில் கரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் மேலும் 313 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று கடந்த சில வாரங்களாக கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,658-ஆக இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 313 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 4,971 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளையை சேர்ந்த 88 வயது முதியவர் மற்றும் புதுக்கோட்டை அருகேயுள்ள ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஆகிய இருவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி சுங்கத்துறை பணியாளர்கள் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சுங்கத்துறை ஊழியர் குடியிருப்பில் இன்று சிறப்பு கரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

அதுபோல காவலர்கள் பலர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் தூத்துக்குடி 3-ம் மைல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் சிறப்பு பரிசோதனை முகாமை நடைபெற்றது.

இதனை எஸ்.பி, ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT