சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி, வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கார்த்திசிதம்பரம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிங்கம்புணரி அருகே மருதிபட்டியில் இருதினங்களுக்கு முன்பு, முன்னாள் விமானப்படை வீரர் வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் கத்தியை காட்டி நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
அதேபோல் இருவாரங்களுக்கு காளையார்கோவில் அருகே முடுக்கூரணி ராணுவவீரர் மனைவி, தாயாரை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்ட குற்றவாளிகளை, தனிப்படை அமைத்து உடனே கைது செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க டிஜிபி, தென்மண்டல ஐஜி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காளையார்கோவில் அருகே பொத்தகுடி கிராமத்தில் மின் கம்பம் ஸ்விட்ச் பெட்டியில் கூடு கட்டி, முட்டையிட்டு அடைகாத்த குருவிக்காக இருளில் வாழ்ந்த கிராமமக்களை பாராட்டுகிறேன்.
இச்செயல் மனிநேயத்தை தாண்டி உயிர்களின் உன்னதத்தை உலகுக்கு போதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய நல்ல உள்ளங்கள் எனது தொகுதியில் இருப்பதற்காக பெருமிதம் அடைகிறேன், என்று கூறியுள்ளார்.