கரோனா வார்டில் சிகிச்சைப் பெறுவோருக்கு வழங்கப்படும் உணவைச் சாப்பிட்டுப் பார்க்கிறார் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி. 
தமிழகம்

புதுக்கோட்டை கரோனா வார்டுகளில் அமைச்சர், ஆட்சியர் அதிரடி ஆய்வு; மருத்துவக் கல்லூரிக்குப் புதிய முதல்வர், கண்காணிப்பாளர் நியமனம்

கே.சுரேஷ்

புதுக்கோட்டையில் உள்ள 2 கரோனா வார்டுகளிலும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி ஆகியோர் ஆய்வு செய்ததோடு அங்கு புதிய மருத்துவ அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனைகளில் கரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த வார்டுகளில் தங்க வைக்கப்படுவோருக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், உணவுக்கான தொகையில் முறைகேடு, கழிப்பறைகள் பராமரிக்கப்படுவதில்லை, முறையாக குடிநீர் விநியோகிப்பதில்லை, நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பாராமுகம் காட்டப்படுவதாக திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், அதிமுக பிரமுகர் ஒருவர் உட்பட ஏராளமானோர் அவ்வப்போது மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்தவாறே வார்டுகளில் தங்கி இருப்போரிடம் காணொலிக் காட்சி மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று (ஜூலை 23) ஆய்வு செய்தார். பின்னர், மருத்துவ அலுவலர்களிடமும் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர், ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி நேற்று இரவில் இரு வார்டுகளையும் ஆய்வு செய்தார். மேலும், அங்கு வழங்கப்படும் உணவுகளைச் சாப்பிட்டார். பல்வேறு குறைபாடுகளைச் சரி செய்யுமாறு மருத்துவ அலுவலர்களிடம் ஆட்சியர் சுட்டிக்காட்டினார். மேலும், இவ்விரு வார்டுகளையும் அடிக்கடி ஆய்வு செய்யுமாறு கோட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார்.

இத்தகைய ஆய்வைத் தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் தற்காலிக முதல்வராக பேராசிரியரும், கண்காணிப்பாளருமான ஆர்.வசந்தராமன் நியமிக்கப்பட்டார். மேலும், நிதியைக் கையாளும் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது.

இதேபோன்று, பேராசிரியர் ஜி.எ.ராஜ்மோகன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தற்காலிக கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இருவரையும் சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நியமித்துள்ளது. அதற்கான உத்தரவு இன்று (ஜூலை 24) பிறப்பிக்கப்பட்டது.

மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ.மீனாட்சி சுந்தரம் விடுமுறையில் செல்வதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT