நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கைப்பற்றப்பட்ட உண்மை சான்றிதழ்களை கேட்டு மாணவர் ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சிபிசிஐடி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் சென்னை மாணவர் உதித் சூர்யா கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் உள்ளார்.
இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஆள்மாறாட்ட வழக்கு விசாரணையின் போது எனது 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச்சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகியவற்றின் உண்மைச் சான்றிதழ்களை போலீஸார் கைப்பற்றினர்.
இந்த சான்றிதழ்கள் தற்போது நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேர உள்ளேன். இதற்கு உண்மை சான்றிதழ்களைக் கேட்கின்றனர். என் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் உள்ள எனது உண்மை சான்றிதழ்களை என்னிடம் திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரருக்கு சான்றிதழ்களை வழங்குவது தொடர்பாக சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 31-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.