தேசிய மீன்வளக் கொள்கையைக் கண்டித்து பாம்பன் மற்றும் ராமேசுவரத்தில் மீனவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பாம்பனில் நாட்டுப் படகுகளில் கருப்புக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன.
ஆர்ப்பாட்டத்தின் போது பாம்பன் நாட்டுப் படகு மீனவப் பிரதிநிதி ராயப்பன் கூறியதாவது,
புதிய மீன்பிடிச் சட்டதின்படி மீனவர்கள் 5 கடல் மைல் தாண்டி 12 கடல் மைல் தொலைவிற்குள்தான் மீன்பிடிக்க வேண்டும். இதில் மீனவர் பதிவுகள், உரிமம் வழங்குதல், மீன்பிடித் தொழிலைக் கவனிக்கும் பணி போன்றவற்றை மாநில மீன்வளத்துறையில் இருந்து பறித்து, கடலோரக் காவல்படைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது.
மீனவர்கள் பத்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்பிலான மீன்களைப் பிடிக்கக்கூடாது. ஆனால், வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் சென்று எவ்வளவு மீன்களையும் பிடிக்கலாம்.
இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு 6 லட்சம் ரூபாய் முதல் 9 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். விதிமீறலில் ஈடுபடும் மீனவர்களின் படகுகள் வலைகளைப் பறிமுதல் செய்வதுடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்படும்.
இந்த தேசியக் கொள்கையின் பிரதான அம்சம் பாரம்பரிய முறையிலான மீன்பிடித் தொழிலை அழித்து, பணக்கார நாடுகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதும், வர்த்தகம் சார்ந்த கார்ப்பரேட் மயமான மீன்பிடித் தொழிலை இந்தியாவில் உருவாக்குவதும்தான்.
இந்தியாவில் 2 கோடி மீனவர்கள் கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி கொள்கையை உருவாக்கும் போது மீனவர்களிடமோ அல்லது நாடாளுமன்றத்திலோ கருத்து கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக கொள்கைகளை உருவாக்கிக்கொள்கிறது.
மீன்பிடி தொழிலை பொருத்தவரைக்கும் விவசாயத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு தொழில் மட்டுமின்றி. நாட்டினுடைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிற தொழில், இந்த தொழிலுக்கு உலக நாடுகள் முழுவதும் மானியங்கள் கொடுத்து ஊக்குவித்து கொண்டிருக்கும்போது இந்திய அரசு மீன்பிடி தொழிலுக்கும் பிடிக்கின்ற மீனுக்கும் கட்டணம் நிர்ணயிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஏற்கெனவே மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் திணறிக்கொண்டிருக்கும் மீன்பிடித்தொழில் மேலும் அழிவை நோக்கிப்போகும், என்றார்.
டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மீன்பிடி படகுகளுக்கான மானிய டீசலின் அளவை உயர்த்தியும் வழங்க வேண்டும், படகுகளுக்கு வழங்கப்படும் மானிய டீசலுக்கு மத்திய, மாநில அரசுகள் வரி விலக்கு அளிக்க வேண்டும், புதிய தேசிய மீன்வளக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த புதன்கிழமையிலிருந்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இதேக் கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமை ராமேசுவரம் பேருந்து நிறுத்தம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீனவப் பிரதிநிதி சேசு தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர்.