கரோனாவை வெல்ல நம் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கையிலெடுக்க வேண்டும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவப் பிரிவைத் தொடங்க வேண்டும், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்களுக்கு உடனடியாகப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இன்று பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்க மாநில தலைவர் ஜெக.சண்முகம் தலைமையில் நடைபெற்ற 'உரிமை கேட்கும் அறவழிப் போராட்டம்' என்ற தலைப்பிலான இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப் பேரரசு கட்சி, தமிழ்நாடு மக்கள் மன்றம், தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி, அகர தமிழர் கட்சி உள்ளிட்டவை பங்கேற்றன.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, கரோனாவுக்கு எதிரான போரில் தங்கள் உயிரையே தந்து தியாகம் செய்த முன்களப் பணியாளர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ''கரோனா என்ற அரக்கனை எந்தப் பக்கவிளைவும் இல்லாத நமது பாரம்பரிய சித்த, ஆயுர்வேத மூலிகைகளைக் கொண்டு குணப்படுத்த முடியும் என்று சென்னை சித்த மருத்துவக் கல்லூரி நிரூபித்திருக்கிற நிலையில் இனியும் தாமதம் இல்லாமல் சித்த மருத்துவத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆங்கில மருத்துவத்தோடு சித்த மருந்தான கபசுரக் குடிநீரை அருந்தச் சொல்லும் மாநில அரசு, முழுமையான சித்த மருத்துவ சிகிச்சையை கையிலெடுக்க தயக்கம் காட்டும் போக்கைக் கைவிட வேண்டும்.
நாம் உண்ணும் நமது பாரம்பரிய உணவு முறைகளே, கர்ணனின் கவச குண்டலமாய் நமது தமிழக மக்களைக் காத்து நிற்கிறது . எனவே ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் சித்த மருத்துவ வார்டுகளை அமைத்து கரோனாவுக்கு எதிரான சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இதனை வட்டார அளவிலும் மாவட்ட அளவிலும் விரிவுபடுத்தி தமிழக மக்களைக் காத்திட முன்வர வேண்டும்'' உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.