புதுச்சேரியில் இன்று புதிதாக 97 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (ஜூலை 24) கூறும்போது, "புதுச்சேரி மாநிலத்தில் 647 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது புதுச்சேரியில் 95 பேர், காரைக்காலில் ஒருவர், மாஹேவில் ஒருவர் என மொத்தம் 97 பேருக்குத் (14.9 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் 61 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 29 பேர் ஜிப்மரிலும், 5 பேர் கோவிட் கேர் சென்டரிலும், காரைக்காலில் ஒருவரும், மாஹேவில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 491 பேர், ஜிப்மரில் 268 பேர், கோவிட் கேர் சென்டரில் 147 பேர், காரைக்காலில் 52 பேர், ஏனாமில் 37 பேர், மாஹேவில் ஒருவர் என மொத்தம் 996 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்று கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 47 பேர், ஜிப்மரில் 20 பேர், கோவிட் கேர் சென்டரில் 15 பேர், காரைக்காலில் ஒருவர் என மொத்தம் 83 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,483 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 33 ஆயிரத்து 658 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 30 ஆயிரத்து 648 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. இன்னும் 312 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன" என்றார்.
சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறும்போது, "ஜிப்மரில் உயிரிழந்தவர் வில்லியனூர் கணுவாப்பேட்டையைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஆவார். அவர் கடந்த 22 ஆம் தேதி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று (ஜூலை 23) உயிரிழந்தார். அவர் கரோனா தொற்றுடன் நுரையீரல்கள் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலோனாருக்கு கரோனா மற்றும் சிறுநீரக பாதிப்பு, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருந்துள்ளன. இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வதைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.