விசாரணைக்கு அழைத்துச் சென்ற விவசாயி உயிரிழந்தது தொடர்பாக அரசின் தலைமை வனப் பாதுகாவலர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள வாகைக்குளம் கிராமத்தில் வசித்தவர் அணைக்கரை முத்து (65). விவசாயியான இவருக்குச் சொந்தமான நிலம், அதே பகுதியில் உள்ளது. அவரது தோட்டத்தில் காய்கறிகளும் பயிரிட்டிருந்தார்.
தோட்டத்துக் காய்கறிகளை விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுப்பதற்காக அணைக்கரை முத்து, தோட்டத்தைச் சுற்றி மின்வேலி அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்துத் தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள், தோட்டத்தைச் சுற்றி மின்வேலி அமைத்தாகக் கூறி, அணைக்கரை முத்துவைச் சிவசைலம் வனச்சரக அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் விவசாயி அணைக்கரை முத்து திடீரென உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. வனத்துறையினர் விசாரணையின்போது தாக்கியதால் அணைக்கரை முத்து உயிரிழந்ததாகக் கூறி அப்பகுதி பொதுமக்களும், உறவினர்களும் அவரது உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து (suo-moto) விசாரணைக்கு எடுத்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், இச்சம்பவம் குறித்து வனத்துறை தலைமை வனப் பாதுகாவலர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.