தமிழகம்

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்: பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்

செய்திப்பிரிவு

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் பெற மாணவர்கள் இன்று முதல் பள்ளிக்கு வரலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாணவர்கள் ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடுவதால் தொற்று ஏற்படுமோ என்கிற பதைபதைப்பு பெற்றோரிடம் இருக்கும்.

இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

* மதிப்பெண் பட்டியல் இன்று முதல் ஜூலை 30 வரை பெறலாம். ஆகவே ஒரே நாளில் பள்ளிக்குச் சென்று குவிவதைத் தடுக்க 30-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் பள்ளிக்கு அனுப்பலாம்.

* போக்குவரத்து வசதி இல்லாததால் பெற்றோர் உடன் சென்று மதிப்பெண் பட்டியலைப் பெற்று உடனிருந்து அழைத்து வரலாம்.

* மாணவர்களுக்கு முகக்கவசத்தின் அவசியத்தையும், சமூக இடைவெளி குறித்தும் பெற்றோர் வீட்டில் தகுந்த அறிவுறுத்தல் கூறி அனுப்பி வைக்கவேண்டும்.

* முகக்கவசம் இல்லாமல் அனுப்பக் கூடாது. சானிடைசர் கொடுத்து அவ்வப்போது கைகளைச் சுத்தம் செய்ய அறிவுறுத்தலாம்.

* பள்ளியில் சான்றிதழை அளிக்கும் ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசு வழிகாட்டுதலின்படி கையுறை, முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா? எனப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். பெற்றோர் செல்லாத பட்சத்தில் மாணவர்கள் கண்காணிக்க அறிவுறுத்தலாம். அவ்வாறு கடைப்பிடிக்காவிட்டால் மதிப்பெண் பட்டியல் தருவதை நிறுத்தக் கோரலாம்.

* நீண்ட நாட்கள் கழித்து நண்பர்களைச் சந்திக்கும்போது போதிய இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து உரையாட மாணவர்களை அறிவுறுத்தவேண்டும்.

* கூடியவரை தொடாமல் இடைவெளி விட்டுப் பேச, பழக அறிவுறுத்த வேண்டும்.

* தண்ணீர் குடிக்க தனியாக வீட்டிலிருந்தே கொடுத்தனுப்பலாம்.

* மதிப்பெண் பட்டியலைப் பெறச் செல்வது மட்டுமே நோக்கமாக இருப்பதால் பட்டியலைப் பெற்றவுடன் வீடு திரும்புவதும், வீடு திரும்பியவுடன் கை கால்களைக் கழுவுவது, அல்லது குளித்தபின் வீட்டுக்குள் வருவதை உறுதிப்படுத்திட வேண்டும்.

* ஜாக்கிரதையாக இருப்பது அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகள் அரசு அறிவித்துள்ளபடி, பள்ளி நிர்வாகம்,

* பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும்.

*மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படும்போது பணியாளர்கள் கையுறை அணிந்திருக்க வேண்டும்.

* மதிப்பெண் பட்டியல் வழங்கும் இடங்கள், விடைத்தாள் நகல், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு ஆகியவற்றுக்கான பணிகள் நடக்கும் இடங்கள் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.

* மாணவர்களை வரிசையில் நிற்க விடாமல், கும்பலாகக் கூட விடாமல், தகுந்த இடைவெளியுடன் நிற்கவைத்து மதிப்பெண் பட்டியலை வழங்குவதை தினமும் உறுதிப்படுத்தவேண்டும்.

மேற்கண்ட நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பாதுகாப்பான நடைமுறையில் மாணவர்கள் வீடு திரும்புவது உறுதிப்படுத்தப்படும்.

SCROLL FOR NEXT