வேலூர் பெண்கள் சிறையில் நன்னடத்தை விதிகளை மீறியதால் நளினி ஒரு மாதத்துக்கு கணவர் முருகனுடன் வீடியோ கால் மூலம் பேசும் வாய்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் பெண்கள்தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ராதா என்பருக்கும் இடையில் பிரச்சினை இருந்தது. இதனால், தன்னை வேறு பகுதிக்கு மாற்றுமாறு சிறை நிர்வாகத்திடம் ராதா கோரிக்கை வைத்தார்.
இது தொடர்பாக விசாரணைநடத்த ஜெயிலர் அல்லிராணி கடந்த 20-ம் தேதி சென்றார்.அப்போது, ராதாவை வேறு அறைக்கு மாற்றினால் தற்கொலை செய்துகொள்வதாக நளினி மிரட்டல் விடுத்தார்.
இதற்கிடையில், சிறை நன்னடத்தை விதிகளை மீறியதாக நளினிக்கான நேர்காணலை ஒரு மாதத்துக்கு ரத்து செய்ததுடன் ராதா வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வாட்ஸ்-அப்பில் பேச தடை
கரோனா அச்சத்தால் சிறைக் கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடை இருக்கும் நிலையில் நளினி-முருகன் மட்டும் 15 நாட்களுக்கு ஒருமுறை வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலமாக பேசிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சலுகை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.