தமிழகம்

திமுக தலைவருக்கும், தொண்டர்களுக்கும் ஆன்மிக விஷயத்தில் வேறுபாடு உண்டு- மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார ராமானுஜ ஜீயர் கருத்து

செய்திப்பிரிவு

திருவாரூர் பகுதியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார ராமானுஜ ஜீயர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எந்தக் கூட்டமாக இருந்தாலும், தர்ம சாஸ்திரங்களை விமர்சிப்பதை கைவிட வேண்டும். மதங்களில் சொல்லப்பட்டுள்ள தர்மங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் தந்தையைப் போன்றது. அது எந்த மதமாக இருந்தாலும் பொருந்தும். இந்தச் சூழலில் கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்திருப்பது கேவலமானது. இதுபோன்ற விஷயங்களில் இளைஞர்கள் வழிதவறி நடக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுத்திருந்தாலும், நீதிமன்றமும் சாதகமான தீர்ப்பை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இந்து தர்மத்துக்கு மட்டுமின்றி வெவ்வேறு தர்மங்களை நிந்திப்பவர்களையும் கைது செய்வதற்கு உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.

மறைந்த பெரியார் ஒரு அரசியல்வாதி. அவரது கட்சிக்காரர்களே அரசியல் விளம் பரம் தேடிக்கொள்வதற்காக பெரியார் சிலை மீது சாயம் பூசியிருக்கலாம். கந்த சஷ்டி கவசம் குறித்த விமர்சனத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கை அரசியல் நடவடிக்கை. அவர்கள் அரசியல் ரீதியாக பேசுவதற்கும், நடவடிக்கைக்கும் வேறுபாடு உள்ளது. குறிப்பாக, ஆன்மிக விஷயத்தில் திமுக தலைவருக்கும், தொண்டர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அனைத்து கோயில்களுக்கும் திமுக தொண்டர்கள் சென்று வருகின்றனர் என்றார்.

SCROLL FOR NEXT